இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (26) இடம்பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து காணொளி மூலம் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின் போது இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்திய பிரதமர் கூறினார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கட்சி பெற்ற பாரிய வெற்றி, இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் பெற்ற வெற்றிக்கு சமமானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும், அது தொடர்பில் இரு நாட்டு மக்களும் புதிய எதிர்பார்ப்புகளுடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருப்பதாகவுதம் பிரதமர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததுடன், இதன்போது இருதரப்பு உறவு மற்றும் பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையினதும், இந்தியாவினதும் பாதுகாப்பு துறை, வணிக தொடர்புகள் என்பவை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் இருதரப்பு ஒத்துழைப்பு பேணப்பட்டுவரும் ஏனைய பிரதான துறைகளினது ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சம்பந்தமாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
காணொளி மூலமான கலந்துரையாடலை ஆரம்பித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,
“நான் இந்த மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எந்நாளும் போன்று உங்களை இந்தியாவிற்கு நாம் மிகுந்த அன்புடன் வரவேற்கிறோம். பாரத தேசத்திற்கு விஜயம் செய்யுமாறு நான் உங்களுக்கு எந்நாளும் அழைப்பு விடுக்கிறேன். இந்த கலந்துரையாடலை இவ்வாறு மேற்கொள்ள கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்தும் நான் இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு மக்கள் ஆணையை பெற்று கொண்டுள்ளமை தொடர்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றியின் ஊடாக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த பாரிய வாய்ப்பாகும். நம் இருவரதும் நாட்டு மக்கள் புதிய கனவுகளுடன், உத்வேகத்துடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருக்கின்றனர். எமக்கு அனைத்து தரப்பினரதும் முன்னேற்றத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியும். கல்வி, விவசாயத்துறை, வணிகம் போன்று பல்வேறு துறைகளில் எம்மால் முன்னோக்கி செல்ல முடியும். உங்களது அரசாங்கத்தினால் அடிப்படை பொருளாதார திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.
இங்கு உரையாற்றிய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாவது,
“இந்த மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று பிரதமராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்ற முதலாவது மாநாடு இதுவாகும்.
நாம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காவிட்டாலும், எம் இருவருக்கும் இடையிலான நட்பு, சகோதரத்துவத்துவ உறவு அதே நிலையில் இருக்கின்றது என நான் கூறிக் கொள்கின்றேன். உலகம் முகங்கொடுத்து கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று நெருக்கடி ஆரம்பித்த சந்தர்ப்பம் முதல் இந்தியா அயல் நாடுகளுக்காகவும்,அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாம் பாராட்டுகின்றோம்.
சார்க் நாடுகளின் பிரதான நாடு என்ற வகையில் சார் வலயத்தின் அனைத்து தலைவர்களுடனும் இந்தியா இதேபோன்று தங்களது கருத்துக்களை பரிமாற்றி கொண்டது.
ஜனாதிபதி தேர்தல் போன்றே பொதுத் தேர்தலிலும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய மக்கள் ஆணை கிடைத்தது. அதேபோன்று அனைத்து இனத்தவர்களுக்கும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.
எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ப நாங்கள் கொவிட்-19 தொற்றை வெற்றிகொள்ள எடுத்த நடவடிக்கை தொடர்பாக பெருமை கொள்கிறோம்.
மிகவும் கடினமான சந்தர்ப்பங்களிலும் நாம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்தமை பற்றி கூற வேண்டும்.
அதேபோன்று எவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டாலும் பொதுமக்களின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியவசிய தேவைகளை உச்ச அளவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதபோன்று கொவிட் வைரஸ் நிலைமையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, ஓய்வூதியம் பெறுவோருக்கு, விசேட தேவையுடையோருக்கும், நாளாந்த கூலி பெறுவோறுக்கும், விவசாயிகளுக்கும் நிதி நிவாரணங்கள் பெற்று கொடுத்தோம்.
வெளிநாடுகளிலிருந்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து சிறப்பாக நிர்வகித்தோம்.
கொவிட் வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை உலக சுகாதார அமைப்பினால் பாராட்டப்பட்டது.
சர்வதேச கடல் மார்க்கத்துடன் அண்மித்து காணப்படுவதால் ஏற்படும் பாதுகாப்பு, தேச எல்லை தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்க எமது நாடுகள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.
கொவிட்-19 உலகளாவிய தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய சந்தைக்கு பொருட்கள் ஏற்றுமதியின் போது இலங்கையின் உற்பத்தி துறைகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவது உகந்ததாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். இது இரு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்தி உதவும்.
சமய, கலாசார விடயங்கள் சமமாக காணப்படும் எமது நாடுகளுக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் இணையில்லாத தோழமையை அதே நிலையில் கொண்டு செல்லவும் நாம் முக்கியத்துவம் வழங்குவோம்.
எமக்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான தொடர்புகளை போன்றே, எமது முற்பட்ட நாகரீகத்திலிருந்து பெறப்பட்ட பொறுமை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, எம்.யூ.எம்.அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே, நிதிய அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.