பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சென்னை தாமரைப்பாக்கத்தில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கூறினார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது.
இதுகுறித்து பண்ணை வீட்டில் நேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், பிரபல பாடகருமான எஸ்.பி.பி.சரண் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘50 நாட்களாக எங்கள் குடும்பத்துடனேயே இருந்து அப்பா மீண்டு வரவேண்டும் என்று எங்களோடு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். அப்பா இப்போது தாமரைப்பாக்கத்தில் உள்ள எங்கள் தோட்டத்தில் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
எங்கள் குடும்பம் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக இறுதிச்சடங்கு நடந்தது. இதற்காக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும், உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, தாமரைப்பாக்கம் நண்பர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி. சென்னையில் இருந்து தாமரைப்பாக்கம் வரை எனது தந்தையின் உடலை கொண்டு வரும்போது, சாலைகளில் நின்று கொண்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சத்தியமாக நான் சொல்கிறேன். அப்பா இந்த அளவுக்கு பெரிய ஆள் என்று எங்களுக்கு தெரியவில்லை.
அப்பாவும், அவருடைய இசையும் மக்களின் சொத்து. அவருக்கு இங்கு அருமையான நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தினரின் ஆசை. அதற்கான திட்டம் உருவாக்கப்படும். இது அருமையான இடமாக, ‘மேப்’பில் அப்பா பெயர் போட்டால் இந்த இடத்தை காட்டுவது மாதிரி ஒரு நினைவு இல்லமாக கட்டி அர்ப்பணிப்போம்.
இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான திட்டத்தை வெளியிடுவோம். வெளியூரில் உள்ள பலர் அப்பாவின் நினைவிடத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
உள்ளூர் போலீசாரிடம் பேசி அதற்கான ஏற்பாடுகள் செய்து 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறினார்.