அதிமுக முதல் அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அக்டோபர் 7-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிவிப்பார்கள்’, என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தனர். அவர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். தனது ஆதரவாளர்களை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து வருவதும், முதல் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை ,நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம், 7-ம் தேதி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இணைந்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்” என்றார்.