ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7,500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3-ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் நடந்து வந்தன. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறுத்தினர்.
பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் மாதம் நியூசிலாந்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். தற்போது அவதார் 2-ம் பாகத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது.
இதுகுறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறும்போது, “நாங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கினோம். இதனால் பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. படம் திரைக்கு வருவதும் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது அவதார் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. அவதார் 3-ம் பாகத்துக்கான படப்பிடிப்பையும் 95 சதவீதம் முடித்து விட்டோம்.” என்றார். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.