தேவனின் அழைப்பும் ஆசீர்வாதமும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன். ஏசாயா 51:2
இன்றைய தியானத்தை நன்றாக விளங்கிக்கொள்ள ஏசாயா 51:1-3 வரை வாசித்து தியானிப்போம். நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவி கொடுங்கள். நீங்கள் வெட்டிஎடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள். உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப் பாருங்கள். அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.
பழைய ஏற்பாட்டை நாம் வாசித்து தியானித்தால் இந்த உண்மையை விளங்கிக் கொள்ளமுடியும். அந்த உண்மை என்ன? அது இன்றுவரை அநேக மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. தேவகரத்தின் கிரியைகளினால் உண்டாக்கிய மக்கள் காலத்திற்குக்காலம் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமலும், அவரின் விருப்பத்திற்கு கீழ்படியாமலும் வாழ முற்பட்டனர். இதனால் மிகவும் வேதனையையும், அழிவவையும் கண்டனர். இதனை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாத மகாஇரக்க முள்ள தேவன் காலத்திற்கு காலம் தமது தீர்க்கதரிசிகள் மூலம் மக்களுடன் தமது அன்பையும், கரிசனையையும். அரவணைப்பையும் தெரிவித்தார்.
எவ்வாறு? ஆபிரகாமைப்போல தமக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படியாக (விசுவசிக்கும் படியாக, அன்பு செலுத்தும்படியாக) தேவ மக்களை தேவன் இன்றும் அழைக்கிறார். எப்படி ஆபிரகாம் தேவனை நம்பினான்? தன்னுடைய கீழ்ப்படிதலின் ஊடாக.
இதனை நாம் ஆதி.12:1-3 இலும், ஆதி.22:12இலும் காணலாம். கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன்பேரைப் பெருமைப் படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். ப10மியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்… நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
அன்று தேவனின் அழைப்பையும் அறிவிப்பையும்கேட்டு தேவ பயத்துடன் கீழ்படிந்த (அன்பு செலுத்திய) ஆபிரகாமிற்கு தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல. ஆபிரகாம் மூலம் தேவன் இந்த உலகிற்கும் ஆசீர்வாதத் தையும், பாதுகாப்பையும் அன்று வாக்களித்தார்.
இன்று தேவன் நமக்கு தரும் அறிவிப்பு, நீதியைப் பின்பற்றி (அதாவது தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து), கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவி கொடுங்கள், நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.
அதாவது தேவதேடலை, தேவ சான்றுகளுடன் நோக்கிப்பார்க்கும்படியாக தேவன் இன்று நமக்கு அன்புடன் அறைகூவல் இடுகிறார். இன்று நம்மில் பலர் தேவர்களைத் தேடுகிறோம். எத்தனைபேர் தேவ சான்றுகளுடன் (தேவன் வழி நடத்தி வந்த வழிகளை, வழி முறைகளை நினைத்து) தேவனைத் தேடுகிறோம்? ஏன்பதுதான் இன்றைய கேள்வி.
தேவ சான்றுகள் என்றால் என்ன? தேவ அழைப்பை ஏற்று, தேவனைப் பின்பற்றிய, தேவ வழிநடத்தலைப் பின்பற்றிய மக்களைப் போன்று தேவனை பின்பற்றுவது, கீழ்ப்படிவது அல்லது, நோக்கிப்பார்ப்பது ஆகும். இவை எல்லாம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு என்று நினையாதீர்கள்.
ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழும் நமக்கோ தேவன் மிகப் பெரிய சான்றை அல்லது, அடையாளத்தை வைத்துள்ளார். (இந்த சான்றை முழுமையாக விளங்கிக் கொள்ள ஏசாயா 1ம் அதிகாரத்தில் இருந்து 11ம் அதிகாரம் வரை வாசிக்கவும்).
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்@ இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இ;ம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7:14. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21.
தேவன் இன்று உங்களுக்கும் எனக்கும் தந்த மிகப்பெரிய அடையாளம், சான்றுதான் இயேசு கிறிஸ்து. அவர் எமக்காக சிலுவையில் தன்னை பலியாக ஒப்புக்கொடுத்த அந்த கல்வாரிக் காட்சியை நோக்கிப்பார்க்கும் போதெல்லாம் பாவங்கள், சாபங்கள் எம்மை விட்டு நீக்கப்பட்டு தெய்வீக விடுதலையை அடைய முடியும். தேவன் தரும் தெய்வீக விடுதலையை அடைந்து கொள்ள என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடுப்போம்.
அன்பின் பரலோக பிதாவே, இன்று உமது அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் குறித்து அறிந்து கொள்ளவும், அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதனால் நாம் அடையும் பாவ சாபங்களில் இருந்து விடுதலையையும், அதனால் கிடைக்கும் தேவ ஆசீர்வாதத்தையும், பாதுகாப்பையும் குறித்து உணரப்பண்ணியதற்காக உமக்கு நன்றி அப்பா. உமக்கு வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்து, உம்முடன் வாழ உதவி செய்யும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonipillai. Rehoboth Ministry – Praying for Denmark.