வேதியியலுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு வேதியியலுக்கான நோபல் விருதை இன்று அறிவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோடுனா, ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் இமானுல் சார்பென்டர், ஜெனிபர் டோடுனா ஆகிய இரு விஞ்ஞானிகளும் சேர்ந்து மரபணுத் தொழில்நுட்பத்தில் சிஏஎஸ்9 எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுன்ணுயிரிகள் ஆகியவற்றின் டிஎன்ஏக்களை மாற்ற முடியும். லைஃப் சயின்ஸ் பிரிவில் இந்தத் தொழிலநுட்பத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். புற்றுநோய்க்குப் புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும், நீண்டகாலமாக தீர்வு இல்லாத நோய்களையும் தீர்க்க உதவும்.
இதுகுறித்து வேதியியல் நோபல் பரிசுக் குழுவின் தலைவர் கிளாஸ் கஸ்டாப்ஸன் கூறுகையில், “வழக்கமாக செல்களில் இருக்கும் ஜீன்களை மாற்றி அமைக்கும் ஆய்வு நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் சாத்தியமில்லாமல்கூட போகலாம். ஆனால், இமானுல் சார்பென்டர், ஜெனிபர் டோடுனா கண்டுபிடித்த சிஏஎஸ் 9 ஜெனிடிக் சிஸர் எனும் கருவி மூலம் சில வாரங்களில் மரபணுவில் மாற்றம் செய்ய முடியும்.
மரபணுக் கருவியில் ஏராளமான சக்தி இருக்கிறது. அடிப்படை அறிவியலில் மட்டும் புரட்சி ஏற்படுத்தாமல், புதிய மருத்துவ சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றத்துக்கு தலைமை ஏற்றுச் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டிர் பெர்லினில் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங் பிரிவின் பேதோஜென்ஸ் அறிவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 1968-ம் ஆண்டு பிரான்ஸில் ஜூவி சர் ஓர்கேவில் சார்பென்டிர் பிறந்தார். பாரீஸில் உள்ள பாஸ்டியர் பல்கலைக்கழகத்தில் 1995-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார் சார்பென்டிர்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெனிபர் டோடுனா கடந்த 1964-ம் ஆண்டு வாஷிங்டனில் பிறந்தவர். பாஸ்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தலில் 1989-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற ஜெனிபர், பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், ஹாவார்ட் ஹக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளராகவும் ஜெனிபர் இருந்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு பதக்கமும், சான்றும் 11 லட்சம் அமெரிக்க டாலர்களும் சம அளவில் பிரித்துத் தரப்படும்.
வேதியியலில் பெண்களுக்கு இதுவரை 5 நோபல் பரிசுகள்தான் வழங்கப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞானி மேரி கியூரிதான் முதன்முதலாக வேதியியலில் பெண்களுக்கான நோபல் பரிசை வென்றார். இருமுறை நோபல் பரிசையும் மேரி பெற்றுள்ளார். அதில் ஒன்று இயற்பியலி்ல் பெற்றதாகும்.