2020 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கு இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு வெற்றி பெற்றவர்கள் யார் என்பது கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்திற்கு (World Food Programme – WFP) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்கள் நிறைந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பங்களித்ததற்காகவும், பசியை ஆயுதமாக பயன்படுத்தி போர்களையும், மோதல்களையும் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தடுக்க முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காகவும் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.