இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து என்று நடிகர் சாம்ஸ் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. தற்போது அதன் 2-ம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கின.
இந்தப் படத்துக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, இதில் நடித்துள்ள நடிகர் சாம்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அதில் பிட்டுப் பட திரையரங்குகள், தொலைக்காட்சி, இணையதளம், சினிமா, பொதுவாக சில சந்தேகங்கள் என்று நீண்டதொரு பதிவை வெளியிட்டு இருந்தார். “யானை அளவு விஷயம் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது எலி அளவை பிடித்துத் தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதுதான் புரியவில்லை? நிறுத்தினால் எல்லாவற்றையும் நிறுத்துவோம்” என்று அந்தப் பதிவை முடித்திருந்தார் சாம்ஸ்.
இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 11) சாம்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:” ’இரண்டாம் குத்து’ படம் சம்பந்தமாக என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள் குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தப் பதிவிற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தன. பலரும் சொன்ன கருத்துகள் என் நல விரும்பிகள் சொன்ன ஆலோசனைகளை வைத்து தற்போது என் கருத்தை என் முடிவைச் சொல்லவே இந்தப் பதிவு.
என் கருத்து
இதுபோன்ற அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் பாலிவுட், ஹாலிவுட் படங்களில், தொலைக்காட்சிகளில், செல்போன்களில், கணினிகளில், ஓடிடி தளங்களில் எனத் தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதே போன்று ஒரு விஷயத்தை படமெடுத்து சென்சாரின் அனுமதியோடு வெளியிடுகிறேன். மற்றதையெல்லாம் பார்த்து அனுமதித்த, சிலநேரம் கண்டும் காணாமல் போகிற நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இந்தப் படத்தை இயக்கி இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் கேட்டிருந்தார்.அவன் செஞ்சா நீ செய்வீயா ? என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை. அவர் கைகாட்டும் காரணங்களும் திருந்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுத்ததில்லை. குரலும் கொடுத்ததில்லை. குறைந்தபட்சம் ஒரு எதிர்ப்புப் பதிவு கூட நான் போட்டதில்லை.
மற்றவர்கள் செய்த தவறை இயக்குநர் சொல்வது போல் கண்டும் காணாமல்தான் போயிருக்கிறேன். அதைத் தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் ? என்று கேள்வி கேட்கும் தகுதி, அருகதை, நேர்மை எனக்கில்லை என்றே நினைக்கிறேன்.
என் முடிவு
இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாகத்தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்..
‘A’ படம் என்று தணிக்கைச் சான்றிதழுடன் வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன? என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி ‘இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து”.
இவ்வாறு சாம்ஸ் தெரிவித்துள்ளார்.