பிரதமரின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவரும் ஊவா மாகாண சபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் .

இந் நியமனத்தை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செந்தில் தொண்டைமானிடம் கையளித்தார்.

செந்தில் தொண்டமான் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறை விவகாரங்களுக்கான இணைப்பாளராக கடமையாற்றி வரும் நிலையில் இந்த புதிய நியமனமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

—–

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது நியமனக் கடிதத்தை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், அதில் தோல்வியடைந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார்.

இதற்கமைய, கருணா அம்மானுக்கு பிரதமரினால் இப்பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

——-

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே போன்று, குறித்த பிரதேசங்களில் மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்றும் மூடப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி நாளையதினம் (15) முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களின் ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் குறித்த பிரதேசங்களில் பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஆயினும், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் கூட, கொவிட்-19 தொற்று நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், முகக்கவசம் அணிதல், கைககளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல் விடயங்களை பொதுமக்கள் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts