பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டாலும், இப்போதைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் படப்பிடிப்புக்குப் போகும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள்.
ஏனென்றால், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புத் தளத்தில் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவியாளர்கள் எனப் பார்த்தால் குறைந்தது 400 பேர் வருகிறார்கள். ஆனால், தமிழக அரசோ 100 பேருக்கு மேல் ஆட்களை வைத்துப் படப்பிடிப்பு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இதனால், கரோனா அச்சுறுத்தல் அனைத்தும் சரியாகி அதிகப்படியான ஆட்களை வைத்து எப்போது படப்பிடிப்பு நடத்தக்கூடிய சூழல் வருகிறதோ அப்போதுதான் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். தற்போதுள்ள சூழல்படி அடுத்த ஆண்டுக்கு ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.