கொட்டாஞ்சேனை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (22) மாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
——
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 5 ஆவது நாளாக இன்று (22) ஆஜரானார்.
இதற்கு முன்னர் அவர் கடந்த 17 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 4 ஆவது தடவையாக ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
——
இலங்கையில் மேலும் 50 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 2 ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
—–
மக்களின் ஆணைக்கிணங்கவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். எனவே, இதற்கு எதிரணியினரும் ஆதரவை வழங்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நேற்று (21) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “இன்று எமக்கு மிகவும் முக்கியமான ஒரு தினமாகவே நாம் கருதுகிறோம். 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்பது மக்களின் ஆணைக்கிணங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், அது நீண்டகாலத் தீர்வாக என்றுமே அமையாது. அதற்கிணங்க நாம் விரைவில் புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் 20ஐ, ஜனநாயக ரீதியாகத்தான் கொண்டுவந்துள்ளோம். எனினும், 19 ஆவது திருத்தச்சட்டமூலம் அவ்வாறு கொண்டுவரப்படவில்லை.
இதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் நாடு பலவீனமடைந்தது. 19 இன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தார்களென ஆணைக்குழுவில் சாட்சி வழங்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும், இதனை தடுத்துக்கொள்ள முடியாதமைக்கு 19 தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனையிட்டு நாம் வெட்கமடையவேண்டும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லதல்ல.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மாஅதிபரை மாற்றக்கூட அதிகாரம் இல்லை.
இவ்வாறான ஜனாதிபதி முறைமைதான் இன்றும் நாட்டில் இருக்கிறது. நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்திருந்தேன். அந்த அதிகாரம் இருந்த காரணத்தினால்தான் யுத்தத்தை எம்மால் நிறைவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.