தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் போது, தமிழகத்தில் அரசு செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார். மக்களின் உயிர் காக்கும் மருந்தை இலவசமாக தர வேண்டியது மக்கள் நலம் காக்கும் அரசின் கடமை என்று அவர் கூறியிருந்தார். இதற்கிடையில் பீகார் மாநிலத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததும் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார். தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து என்றும், அது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்” என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.