‘மிஸ் இந்தியா’ திரைப்படம் பல இளம்பெண்களை ஊக்கப்படுத்தும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படம் ‘மிஸ் இந்தியா’. அறிமுக இயக்குநரான ஒய். நரேந்திரநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் எஸ். கொனேரு தயாரித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் உடன் ஜகபதி பாபு, நாடியா மோயுடு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, விகே நரேஷ், பூஜிதா பொன்னடா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘மிஸ் இந்தியா’ படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளதாவது:
‘தனது கனவுகளை தான் அடைவதைத் தடுக்க எதையும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சம்யுக்தா என்ற பெண்ணின் அழகாக வடிவமைக்கப்பட்ட கதையே மிஸ் இந்தியா. இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்காக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, ஏனெனில் பல இளம்பெண்கள் தாங்கள் பார்க்கும் மொழியை பொருட்படுத்தாமல் அவர்களின் கனவுகளை அடைய இப்படம் ஊக்கமளிக்கும் என்று நான் உணர்கிறேன்.’
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.