தேவனும் அதிசயிக்கத்தக்க வாழ்வும்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
அது முதல் இயேசு, மனந்திரும்புங்கள், பரலோக இராட்சியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்க தொடங்கினார். மத்தேயு 4:17
இந்த வாரம் கிறிஸ்த்தவத்தில் சொல்லப்படும் மனந்திரும்புதலும், இரட்சிப்பும் என்றால் என்னவென்பதைக் குறித்தான தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்வ தோடு மட்டுமல்ல, அறிந்துகொண்ட தவறான விளக்கத்தில் இருந்து விடுதலை பெற்றுக் கொள்வNhதடு, இரட்சிப்பு என்னும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பற்றி அலைகள் வாசகநேயர்கள் சரியாக புரிந்து கொள்ளும்படியாக உங்கள் யாவரையும் அழைத்துச் செல்கிறேன்.
மக்கள் மதவழி முறைகளை, மதசடங்காச்சாரங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து அல்லது பின்பற்றி வந்தாலும், தானதர்மங்கள் மூலம் தங்களுடைய கிரியைகளை (செயல்களை) நடப்பித்து வந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பு என்ற பாவமன்னிப்பின் நிச்சயம் நமது வாழ்க்கையில் இல்லாதிருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. இதில் இருந்து இரட்சிப்பு மதசடங்காச்சாரத்தால், கிரியையால் ஏற்படும், உருவாகும், அல்லது கிடைக்கும் ஒன்றல்ல என்பதை நாம் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
அப்படியானால் இரட்சிப்பு என்றால் என்ன? தேவனுடைய உருக்கமான இரக்கத்தால் மனந்திரும்பும் (அவரைத்தேடும் மக்களுக்கு) மக்களுக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு. லூக்கா 1:77 மிகத்தெளிவாக இவ்வாறு கூறுகிறது. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும். இதில் இருந்து நாம் அறியக்கூடியதாக இருப்பது, இரட்சிப்பு பாவ மன்னிப்போடு தொடர்புள்ள ஒரு விடையம் என்று.
இதை விளங்கிக்கொள்ள மத்தேயு 3;:1-8 வரை வாசிப்போம். அந்நாட்களில் யோவான்ஸ்நானன் ய10தேயாவின் வனாந்தரத்தில் வந்து, மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான், வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், ய10தேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு, (மனந்திரும்புதலுக்குரிய தன்மையற்ற சூழலைக்கண்டு) விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற (பாவம் நீங்கின வாழ்வுக்கேற்ற) கனிகளைக் கொடுங்கள் (தன்மைகளை வெளிக்காட்டுங்கள்) என்று பிரசங்கித்தான்.
முதலில் நாம், இரட்சிப்பு பாவமன்னிப்போடு தொடர்புடையது என்று பார்த்தோம். இந்த வேதப்பகுதியில் இருந்து, பாவமன்னிப்பு மனந்திரும்புதலுடன் தொடர்புள்ளது என வாசித்து அறிந்தோம். மனந்திரும்புதல் மூலம் பாவமன்னிப்பும், பாவமன்னிப்பின் மூலம் இரட்சிப்பையும் (தேவனுடன் வாழும் வாழ்க்கையையும்) அடைந்து கொள்ளலாம். இன்று அநேகர் தாங்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தங்கள் பாவங்களில் இருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வது கிடையாது. இன்னும் சிலருக்கு மனந்திரும்புதல் என்றால் என்ன என்று தெரியாது.
பழைய மதத்தில் இருந்து புதிய மதத்திற்கு வந்துவிட்டால் அதை மனந்திரும்புதல் என்று நினைப்பவர்களும் உண்டு. மனந்திரும்புதல் என்பது வாழ்க்கையில் ஏற்படவேண்டிய ஒன்றென்பதை இன்று பலர் அறியாதிருக்கிறார்கள். பழைய வாழ்க்கையைவிட்டு புதியபரிசுத்த வாழ்கைக்குத் திரும்புவதே மனந்திரும்புதல் ஆகும். இதை நாம் மத்தேயு 3:8இல் காணலாம். மனந்திரும்புதலுக்கு ஏற்ற (பாவம் நீங்கின வாழ்வுக்கேற்ற) கனிகளைக் கொடுங்கள் (தன்மைகளை வெளிக்காட்டுங்கள்).
தேவனுக்கு பிரியமான மக்களே, இரட்சிப்பு என்பது தேவனுடைய மக்களுக்கு (அதாவது தேவனால் படைக்கப்பட்ட மக்களுக்கு) தேவனால் உண்டான ஓர் ஆசீர்வாதம் ஆகும். அந்த இரட்சிப்பினால் வரும் ஆசீர்வாதத்தை அனைவரும் பெற்று வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அந்த ஆசீர்வாதம் உன்னுடன் மட்டும் முடிந்து போவதல்ல. உன் மூலம் உனது குடும்பமும், உனது சந்ததியினரும் அடைந்து தலைமுறை தலைமுறையாக வாழும் ஓர் ஆசீர்வாதமான வாழ்க்கையாகும்.
அந்த ஆசீர்வாதத்தை உலகிற்கு அறிவிக்க, அளிக்க பிதாவாகிய தேவன் தனது ஒரேபேறான குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார். வெறுமனே இயேசுவின் பிறப்பை உலகம் அறிந்திருப்பதுபோல நீயும் அறியாமல், அவர் ஏன் உலகில் மனித அவதாரம் எடுத்து வந்தார், அவர் ஏன் சிலுவைமரணம் மட்டும் தன்னைத்தாழ்த்தி மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்பதை அறிந்துணர்ந்து இரட்சிப்பின் சந்தோசத்தை அடைந்து கொளவோம்;. தேவன் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.
அன்பின் பரலோக பிதாவே, இன்று நீர் எனக்கு மனந்திரும்புதல் மூலம் கிடைக்கும் பாவமன்னிப்பையும், பாவமன்னிப்பு மூலம் கிடைக்கும் இரட்சிப்பையும் குறித்து அறிந்து கொள்ளக்கூடிய ஓர் வேளையை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. நானும், எனது குடும்பமும் உமது இரட்சிப்பின் சந்தோசத்தை அடைந்து கொள்ளும்படியாக எனக்கு உதவி செய்யும். உமது பிள்ளையாக உம்முடன் வாழும் வாழ்க்கையை எனக்குத்தந்து, உமது பிள்ளையாக என்னையும் எனது குடும்பத்தையும் ஏற்றுக்கொள்ளும். உமது பிறப்பின் மகிழ்ச்சி எமக்கு ஓர் விடுதலையின் வழியைக்காட்டட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.