அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்ஷ்மி பாம்’ திரைப்படம் ‘லக்ஷ்மி’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘காஞ்சனா’. தற்போது இந்தப் படம் ‘லக்ஷ்மி பாம்’ என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, தமிழில் இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இந்தியிலும் இயக்கியுள்ளார்.
கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 9-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அக்ஷய் குமாரின் திருநங்கை கதாபாத்திரத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்துக்கான தணிக்கை நடந்தது. இது முடிந்ததும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் ஷபினா கான், துஷார் கபூர், அக்ஷய் குமார் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
‘லக்ஷ்மி பாம்’ என்கிற பெயரை வெறும் ‘லக்ஷ்மி’ என்று மாற்றி வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு பேட்டியில், லக்ஷ்மி வெடியைப் போல அந்தத் திருநங்கை கதாபாத்திரம் வலிமையானது என்பதால்தான் ‘லக்ஷ்மி பாம்’ என்கிற பெயரைத் தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் லாரன்ஸ் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.