பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ், 20 ஆண்டுகளாக சினிமாவில் பாடிக்கொண்டிருக்கிறார். கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாசின் மகனான இவர்,
தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், துளு போன்ற பலமொழிகளில் பின்னணி பாடியுள்ளார். கேரள மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தற்போது, ‘இனி மலையாள சினிமாக்களுக்கு பாடமாட்டேன். அந்த அளவுக்கு இந்த திரை உலகம் எனக்கு சோர்வினை தந்திருக்கிறது’ என்கிறார். அது பற்றி விளக்குகிறார்..
“மலையாளத்தில் இசை அமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் தகுதிக்கான பணம் கிடைப்பதில்லை. தமிழிலும், தெலுங்கிலும் இந்த பிரச்சினை இல்லை. அதனால் ஏற்பட்ட சோர்வினால்தான் இந்த முடிவினை எடுத்திருக்கிறேன். மலையாளத்தில் ‘செலக்டீவ்வாக’ பாடக்கூட எனக்கு விருப்பம் இல்லை.
கோடிகளை முதலீடு செய்து சினிமாவை உருவாக்கும் தயாரிப்பாளர்கள் நடிகர்- நடிகைகளுக்கு பெரிய சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் தகுதியான சம்பளத்தை தர தயங்குகிறார்கள். சமீபத்தில் பிரபலமான தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்தார். எனது தந்தையை பாட வைக்கவேண்டும் என்றார். நான் மேனேஜரின் நம்பரை கொடுத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் என்னை மீண்டும் அழைத்தார். ‘தாஸ் சேட்டன் (ஜேசுதாஸ்) நிறைய பணம் கேட்டார்’ என்றார். நான் அவரிடம் ‘உங்களுக்கு ஜேசுதாசின் குரல் தேவை அல்லவா. அந்த குரலுக்கு அவர் கேட்ட பணம் கூடுதல் என்றா சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன்.
அரை நூற்றாண்டுகளுக்கு அதிகமாக பாடுகிற, அரை லட்சத்திற்கு அதிகமான பாடல்கள் பாடியுள்ள ஜேசுதாஸ் அதற்கு ஏற்ற சம்பளம் கேட்கும்போது, அதை ‘பெரிய தொகை’ என்கிறார்கள். பின்பு எப்படி இதர பாடகர்களால் இங்கே நிலைக்க முடியும். 20 வருடங்களாக மலையாளத்தில் பாடும் எனக்கு இப்போது மிக குறைந்த சம்பளமே கிடைக்கிறது. நான் யாரையும் குறைசொல்லவில்லை. இந்த இன்டஸ்டிரி இப்படித்தான் இருக்கிறது. அதனால், அலட்சியப்படுத்தப்படும் அனைவருக்குமாக நான் இப்படிப்பட்ட கடினமான முடிவை எடுத்திருக்கிறேன்.
சமீபத்தில் கொச்சியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது சிலர் என்னை சந்தித்து பேசினார்கள். ஊரடங்கு பற்றியும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் விவாதித்தார்கள். நான் பணநெருக்கடி பற்றி சொன்னபோது அவர்கள் சிரித்துக்கொண்டு, ‘ஜேசுதாசின் மகன் இஷ்டம்போல் பணம் சம்பாதிப்பாரே..’ என்றார்கள். நான் அவர்களிடம் ஒரு சினிமாவில் நான் பாடினால் எவ்வளவு பணம் எனக்கு கிடைக்கும் என்பதை யூகித்துச் சொல்லுங்கள் என்றேன். அவர்கள் சொன்ன தொகையை நான் ஐந்து சினிமாக்களில் பாடினால்கூட சம்பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனாவால் ரத்து செய்யப்பட்டாலும் நம்மை நம்பி வாழ்பவர்களை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. குழந்தைகளின் பள்ளிக்கட்டணத்தில் எந்த சலுகையும் கிடைப்பதில்லையே.
மலையாள சினிமாவில் நான் பாடமாட்டேன் என்று சொன்னாலும், இசை என்பது சினிமா மட்டும் சார்ந்தது இல்லை. வேறு சில திட்டங்கள் என் மனதில் உள்ளது. இன்டிப்பென்டன்ட் மியூசிக்கிற்கு இங்கே அதிக வாய்ப்புள்ளது. கொரோனா கால நெருக்கடியால் வேலையிழந்து கஷ்டப்படுகிறவர்களில் பெரும் பகுதி இசைக் கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தபோது சொந்தமாக மியூசிக் கம்பெனி நிறுவும் திட்டம் உருவானது. யூடியூப் சானலில் அதிக முனைப்புடன் செயல்படவும், ஆல்பங்கள் தொடர்ந்து தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைத்துக்கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபடப்போகிறேன். என்னால் தவிர்க்க முடியாத அளவுக்கு பாடலும், இசையுமாக யாராவது அணுகினால் மட்டுமே நான் எடுத்திருக்கும் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றி பரிசீலிக்கவே செய்வேன்.
எனது இத்தகைய முடிவுகளை அப்பா ஏற்றுக்கொண்டாரா என்று கேட்பவர்களுக்கு, இந்த முடிவுகள் அனைத்தும் எனக்கானது மட்டுமே என்பதுதான் என் பதில். பாட்டும், நடிப்பும், தொழில்களும் நானே விரும்பி செய்பவைகளாகும். நான் இந்த வயதிலும் அப்பாவின் அனுமதியை கேட்டு வாங்கிவிட்டு முடிவுகளை எடுக்க முடியுமா! ஜேசுதாஸ் லெஜென்ட். பல வருடங்களாக கஷ்டப்பட்டு அவர் அந்த இடத்தை அடைந்திருக்கிறார். நான் என்ன செய்தாலும் அதில் ஒரு கீறல்கூட விழாது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், பாடகர் என்பதைவிட சினிமா தயாரிப்பு பணி உள்பட பல துறைகளில் ஜொலிக்கிறார். அது நல்லதல்ல என்று யாராலும் சொல்ல முடியுமா! அப்பாவை போன்று நானும் வாழவேண்டும் என்று யாரும் நிர்பந்திக்க முடியாது. அவரது ஆலோசனைகளை கேட்டுக்கொள்வதுண்டு. ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பாவிடம் அனுமதி வாங்கும் மகனல்ல நான்.
முன்பு சினிமாவில் நடிக்க தீர்மானித்தபோது, அப்பாவிடம் அனுமதி வாங்கினீர்களா என்று சிலர் கேட்டார்கள். அப்பாவிடம் அதுபற்றி சொன்னேன். அனுமதி கேட்டு நான் நிற்கவில்லை. இத்தனை வயதான பின்பும் அனுமதி வாங்குவதற்காக நின்றுகொண்டிருந்தால், நானும் ஒரு தந்தைதான் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கையிலும், பக்தியிலும் எனக்கும்- அப்பாவிற்கும் ஒத்துப்போகாது..” என்று மனந்திறந்து பேசும் விஜய் ஜேசுதாஸ், நடிப்பில் தனக்கு இருக்கும் ஈடுபாடு பற்றியும் பேசுகிறார்.
“தனுஷ் எனக்கு நெருக்கமான நண்பர். அதனால்தான் மாரியில் வில்லனாக நடித்தேன். டைரக்டர் பாலாஜி மோகன் நிர்பந்தித்து அதில் நடிக்கவைத்தார். அடுத்து படைவீரனில் நடித்தேன். அதன் பிரிவியூவை தனுஷ் பார்த்துவிட்டு ‘நீ மாரியைவிட பலமடங்கு சிறப்பாக இதில் நடித்திருக்கிறாய்’ என்றார். ‘மாரியில் நீயும், டைரக்டரும் சொல்லித் தந்ததால்தான் என்னால் இதில் சிறப்பாக செய்ய முடிந்திருந்திருக்கிறது’ என்றேன்.
நண்பர்களோடு சேர்ந்து செயல்படும்போது கூடுதல் எனர்ஜி கிடைக்கும். இப்போது கொச்சியில் சர்வதேச தரத்துடன் இயங்கும் ‘மென்ஸ் க்ரூமிங் பிராண்டை’யும் நண்பர்களோடுதான் நடத்துகிறேன். தென்னிந்தியா முழுவதும் அதற்கான கிளைகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறேன். பாட்டு, நடிப்பு, தொழில் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவேன். பிரளயம், கொரோனா போன்றவை நமக்கு புதிய தொழில்களை கற்றுத்தருகிறது என்பது உண்மைதான்..” என்கிறார், விஜய் ஜேசுதாஸ். சென்னையில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் விஜய் ஜேசுதாஸ் குடும்பத்தோடு கீழ் தளத்திலும், அவரது பெற்றோர் மேல் தளத்திலும் வசிக்கிறார்கள்.