புகழுக்காகப் படங்கள் பண்ண மாட்டேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘சூரரைப் போற்று’ படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாக சந்தித்துப் பேசினார் சூர்யா.
அப்போது, “இரண்டரை வருட பயணம், அதிகமான பொருட்செலவு அடங்கியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் 2- 3 படங்களில் நடித்திருக்கலாம். எதற்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு சூர்யா கூறியதாவது:”புகழுக்காகவோ, நம்மளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக சினிமா பண்ண மாட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தக் கனவும் பெரியது கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். அனைத்துமே யாரை சந்திக்கிறோம், யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பது தான்.
இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நம்ம பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்திலிருந்த வீரியம் தான். அது தான் அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்தது என்று சொல்வேன். இந்தப் படம் பட உருவாக்கம், கதை தேர்வு என அனைத்து விஷயத்திலும் என்னைக் கேள்வி கேட்க வைத்துள்ளது என்று சொல்வேன்”
இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.
சூர்யா அளித்துள்ள பேட்டியில் தனது அடுத்த பட வரிசையை உறுதி செய்துள்ளார்.
முதலில் ‘நவரசா’ ஆந்தாலஜி, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், ‘வாடிவாசல்’ ஆகிய வரிசையில் நடிக்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். இதில் த.செ.ஞானவேல் படத்தை சூர்யா குறிப்பிடவில்லை. ஏனென்றால், அதில் சிறு கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்கவுள்ளது நினைவு கூரத்தக்கது.