14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்..

தனது 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் ஆமிர் கானின் மகள் ஐரா கூறியுள்ளார்.
நடிகர் ஆமிர் கானுக்கும், முதல் மனைவி ரீனாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். ஆமீர் விவாகரத்து செய்த பிறகு ஐரா கான், அவரது சகோதரர் ஜுனைத் என இருவரும் ரீனாவின் கவனிப்பில் வளர ஆரம்பித்தனர். கடந்த வருடம், ‘யூரிபெடீஸ் மெடியா’ என்கிற மேடை நாடகம் மூலம் ஐரா கான் இயக்குநராக அறிமுகமானார்.
சமீபத்தில் ஐரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேசியுள்ளார்.
“என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஏனென்றால் இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களே. ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை.
எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.
எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.
ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சினையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல” என்று ஐரா கூறியுள்ளார்.
—–
பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கானின் மகள் ஐரா கான், தனக்கு மன அழுத்தம் (clinical depression) இருப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை உலக மனநலத் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐரா ஒரு காணொலியைப் பகிர்ந்திருந்தார். இதில் மனநலம் பேணுதல் குறித்த உரையாடலைத் தொடங்க இது சரியான நேரம் என்று பேசியுள்ளார்.
“நான்கு வருடங்களுக்கும் மேலாக நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாகத் தேறியுள்ளேன்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, மனநலம் குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்ன செய்வதென்று எனக்குச் சரியாகப் புலப்படவில்லை. சரி, நான் எப்படித் தொடங்கினேனோ அப்படியே தொடங்குகிறேன். எதைப் பற்றி நான் மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டும்? மன அழுத்தம் வரும் அளவுக்கு நான் யார்? எனக்கு எல்லாம் இருக்கிறது இல்லையா?
நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கின்றன. நம்மைக் குழப்பும், மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் பல சூழல்கள், உணர்வுகளைக் கடந்து வருகிறோம். எல்லாவற்றையும் பற்றி இப்போதே பேசிவிட முடியாது. ஆனால், நான் சில விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன் என நினைக்கிறேன். குறைந்தது அவற்றை எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
எனவே, என்னுடன் இந்த மனநலம் பேணுவதற்கான வினோதமான, நகைச்சுவையான, சில நேரங்கள் குழந்தை பேசுவதைப் போன்ற, முடிந்தவரை நான் நேர்மையாக இருக்கும் பயணத்தில் என்னோடு வாருங்கள். ஒரு உரையாடலை ஆரம்பிப்போம்” என்று ஐரா பகிர்ந்துள்ளார்.
ஆமிர் கானுக்கும், அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். கடந்த வருடம், ‘யூரிபெடீஸ் மெடியா’ என்கிற மேடை நாடகம் மூலம் ஐரா கான் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts