எந்த ஒரு குற்றமும் செய்யாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவிற்கும் கடிதம் எழுதியது தவிர நான் எந்த தவறும் செய்யவில்லை என ரிசாத் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.
நீதி நியாயத்தால் விடுதலையடைவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதி அளித்துக் கொடுத்ததற்காக எந்த ஒரு குற்றமும் செய்யாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.1990 இல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருகின்றனர்.
ஆனால் இந்த முறை அதனை பெரிதுபடுத்தி அதற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த என்னை சிறையில் அடைத்துள்ளனர். நாட்டில் நீதி நியாயமிருந்தால் நான் விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனக்கு நடந்த அநியாயத்தை படைத்த இறைவனிடம் ஒப்படைத்துள்ளேன்.
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்.மக்கள் வாக்களிக்க அனுமதி கோரிய போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் ஆலோசனை கேட்டேன்.