தீபாவளிப் பண்டிகை என்றாலே புதுப்படங்கள் வரிசை கட்டும். ரசிகர்களோ திரையரங்க வாசலில் வெடி வெடித்துக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.
மத்திய அரசு திரையரங்குகள் திறப்புக்கு அனுமதியளித்துவிட்டது. ஒரு சீட் விட்டு ஒரு சீட் தான் டிக்கெட் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால், படத்தின் வசூல் பெருவாரியாகக் குறையும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தமிழக அரசோ இன்னும் திரையரங்குகள் திறப்புக்கு அனுமதியளிக்கவில்லை.
கடந்த 7 மாதங்களாகத் திரையரங்குகள் மூடியே இருப்பதால், பல்வேறு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுதான் தங்களுடைய தளத்தை பிரபலப்படுத்தும் நேரம் என்று, ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டுக் கொண்டாட்டத்துக்காக ஓடிடி நிறுவனங்கள் வெளியிடும் படங்களின் பட்டியல் இதோ: (தேதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)
மிஸ் இந்தியா (தெலுங்கு) – நவம்பர் 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
லட்சுமி பாம் (இந்தி) – நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்காகும்.
சூரரைப் போற்று (தமிழ்) – நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாகவுள்ளது. ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
லூடோ (இந்தி) – நவம்பர் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அனுராக் பாசு இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஆதித்யா ராய் கபூர், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 4 கதைகள் ஒரே இடத்தில் முடிவது போன்று இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சாலாங் (இந்தி) – நவம்பர் 13-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மூக்குத்தி அம்மன் (தமிழ்) – நவம்பர் 14-ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் கூட்டு இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ளார். நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிக்கும்படி இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நாங்க ரொம்ப பிஸி (தமிழ்) – நவம்பர் 14-ம் தேதி நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி தயாரித்துள்ள இந்தப் படம் ‘மாயா பஜார் 2016’ என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
இந்தப் படங்கள் தவிர்த்து அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகாரம்’ மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில்தான் வெளியாகவுள்ளன. தீபாவளி வெளியீடு என்று தகவல் வெளியாகிவிட்டாலும், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படாமல் உள்ளது.