எதிர்காலத்தில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களை நிரப்பும் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படம் இது. வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பல ஊடகங்களுக்கு சூர்யா பேட்டியளித்து வருகிறார்.
முதலில் திரையரங்க வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடையே சற்று அதிருப்தி எழுந்தாலும் சூர்யா, இந்தச் சூழலில் இந்த முடிவு எடுப்பதே சரி என்கிற ரீதியில் விளக்கமளித்துக் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
முன்னதாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள சூர்யா, “நாம் சூழலுக்கு ஏற்றவாறு மாறி, வளர வேண்டும். இது ஒரு துறை இன்னொரு துறையின் மீது ஆதிக்கம் செலுத்தும் விஷயம் அல்ல. பரிணாம வளர்ச்சியின் ஒரு பங்கு இது. மனிதர்களான நாம் சமூக விலங்குகள். திரையரங்குகள் திரைப்படம் பார்க்கத்தான் விரும்புவோம்.
எதிர்காலத்தில், சிறிய பட்ஜெட், தனித்துவமான படங்கள் ஓடிடியை நிரப்பும். பெரிய திரைக்குப் பிரம்மாண்டமான, சிறப்பான படங்களை எடுக்கும் நிர்பந்தம் இயக்குநர்களுக்கு உருவாகும். ‘சூரரைப் போற்று’ திரையரங்க அனுபவத்துக்காக எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு காட்சியும், இசையும், நடிப்பும் அதை மனதில் வைத்தே செய்யப்பட்டன. அப்படி இருந்தாலும் தற்போதைய சூழலில் எது சிறப்பானது என்று பார்த்து முடிவெடுத்து, முன்னே நகர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நவம்பர் 12 ஆம் தேதி ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.