அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளுக்கு இவர்கள் வரலாம் என ஒரு உத்தேச பெயர் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் அரசியல் மரபுக்கு இணங்க, எதிர்வரும் ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்பார்.இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய முக்கிய தலைவர்களின் உத்தேச பெயர் பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தேர்தல் பரப்புரையின் போது, அமெரிக்காவை பிரதிபலிக்கும் வகையில் தமது அமைச்சரவை அமைந்திருக்கும் என ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.எனவே, பன்முகத்தன்மை குறிக்கோளாக கொண்ட ஒரு அணியை ஒன்றாக இணைக்கும் பணியில், அடுத்த இரண்டரை மாதங்கள் ஜோ பைடன் கவனம் செலுத்துவார் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சராக 55 வயதாகும் சூசன் ரைஸ் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடனுடன் இணைந்து அரசியல் களம் கண்டவர் சூசன் ரைஸ்.
2009 முதல் 2013 வரை இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராக செயல்பட்டார், தொடர்ந்து ஒபாமாவின் ஆட்சி காலத்தில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று, குடியரசுக் கட்சியின் கடும் நெருக்கடியால், சூசன் ரைஸ் வெளிவிவகார அமைச்சர் என்ற தமது கனவை விட்டுக்கொடுத்தார்.
சூசன் ரைஸ் மட்டுமின்றி, 58 வயதான அந்தோணி பிளிங்கன், வில்லியம் பர்ன்ஸ், கிறிஸ் கூன்ஸ் கிறிஸ் மர்பி
அந்தோணி பிளிங்கன், வில்லியம் பர்ன்ஸ், கிறிஸ் கூன்ஸ் கிறிஸ் மர்பி ஆகியோர்களின் பெயர்களும் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் பொறுப்புக்கு வரலாம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக 59 வயதாகும் மைக்கேல் ஃப்ளூர்னாய் என்பவரை பைடன் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது.அமெரிக்க வரலாற்றில் இதுவரை பெண்மணி ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்றதில்லை.
இன்னொருவர், 2004 ஈராக் போரில் தமது கால் ஒன்றை இழந்த 52 வயதாகும் டாமி டக்வொர்த் என்ற பெண்மணியும் ஜோ பைடனின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அடுத்த நிதியமைச்சராக ஜெர்மனியை பூர்வீகமாக கொண்ட 58 வயதாகும் பொருளாதார நிபுணர் லெயில் பிரைனார்டு என்ற பெண்மணியின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொருவர், கருப்பினத்தவரும் ஒருபால் ஈர்ப்பாளருமான ரபேல் போஸ்டிக் இவர்களுடன், சாரா ப்ளூம் ரஸ்கின், ரோஜர் பெர்குசன், ஜேனட் யெல்லன் ஆகியவர்கள் பெயர்களும் பரிசீலனையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய சட்ட அமைச்சராக 66 வயதாகும் டக் ஜோன்ஸ் என்பவரை ஜோ பைடன் முன்மொழிவார் என்றே கூறப்படுகிறது.1963-ல் கருப்பினத்தவர்களுக்கான தேவாலயம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்தது இனவாத அமைப்பான கு க்ளக்ஸ் கிளான் தான் என்பதை தமது விசாரணையின் மூலம் அம்பலப்படுத்தியவர் இவர். மட்டுமின்றி அலபாமா ஜனநாயகக் கட்சியில் முக்கிய தலைவரான டக் ஜோன்ஸ் பைடனுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளவர், மேலும் அமெரிக்காவில் சிவில் உரிமைகள் விஷயத்தில் டக் ஜோன்ஸ் நம்பக்கூடிய நபராக இருப்பார் என கருதப்படுகிறது.