8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் நாளை திறப்பு பழைய படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு நாளை (10-ந்தேதி) தியேட்டர்களை திறந்து 50 இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து தியேட்டர்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரிய கதாநாயகர்கள் படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகாது என்றும் தற்போதையை சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் முரட்டு குத்து 2, களத்தில் சந்திப்போம் ஆகிய 4 படங்கள் மட்டும் திரைக்கு வர தயாராக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் வி.பி.எப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று பாரதிராஜா அறிவித்து இருப்பது புது படங்கள் ரிலீசில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் சமரசம் ஏற்படவில்லை.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்பிரமணியம், ஸ்ரீதர் ஆகியோர் கூறும்போது, “அரசு உத்தரவுப்படி நாளை தியேட்டர்கள் திறக்கப்படும். தியேட்டர் அதிபர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்களை திரையிடுவோம்” என்றனர். ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் வீரம், விசுவாசம், தனுசின் அசுரன் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.