தற்போது ஐக்கிய அரசு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது.
பொதுவாக, வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற ரீதியில்தான் இந்த நாடுகளில் தண்டனை வழங்கப்படும். நமது நாட்டில் கொலை செய்தால் குற்றவாளி ஜாமீனில் வெளியில் நடமாட முடியும். ஆனால், வளைகுடா நாடுகளில் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் மட்டுமே குற்றவாளியை மன்னிக்கும் தகுதி பெற்றவர்கள். குற்றவாளியை உறவினர்கள் மன்னிப்பதாகத் தெரிவித்தால், கொலை குற்றவாளி மரண தண்டனையில் இருந்து தப்ப முடியும். அதே போல, தகாத உறவுக்கு வளைகுடா நாடுகளில் கடுமையான தண்டனை அளிக்கப்படும். இந்த தண்டனைகள் கல்லால் அடித்து கொல்லப்படுவது அல்லது 100 பிரம்படிகள் என்கிற ரீதியில் கொடூரமாக இருக்கும்.
இஸ்லாமிய நாடுகளில் மதச்சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது உலகம் அறிந்ததே. காலம் மாறினாலும், நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டாலும் மதச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர எந்தவொரு இஸ்லாமிய நாடும் தயக்கம் காட்டும்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது.
வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் எனப்படும் அமீரகம் சற்று வித்தியாசமானது. துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட 6 நகரங்கள் இணைந்த இந்த குட்டி நாட்டில் மற்ற வளைகுடா நாடுகளை விட சற்று தளர்வுகள் அதிகம். சுற்றுலா இந்த நாட்டுக்கு வருவாய் ஈட்டி தரும் முக்கிய தொழில். இங்குள்ள, துபாய் உலகின் முன்னணி சுற்றுலா நகரமாகும். லட்சக்கணக்கான வெளிநாட்டினரும் இந்த நாட்டில் வசிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 98 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் 84 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அமீரகத்தை தாயகமாகக் கொண்டவர்கள் மொத்தமே 11 லட்சத்துக்குள்தான் இருக்கின்றனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களும் அமீரகத்தில் இணைந்து வாழ்கின்றனர். அதிகபட்சமாக இந்தியர்கள் மட்டும் 26 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
ஐரோப்பியர்கள் 2.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதனால், வளைகுடா நாடுகளில் சகிப்புத்தன்மை அதிமாகக் கொண்ட ஒரு நாடு என்று அமீரகத்தை குறிப்பிடலாம். பிற மதத்தை நிந்திக்கும் இஸ்லாமியரும் இங்கே தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
சகிப்புத்தன்மை நிறைந்த அமீரகம் தற்போது அடுத்த கட்டத்தில் காலடியை எடுத்து வைத்துள்ளது.
தனிநபர் சுதந்திரம் தொடர்பான சட்டங்களில் நவம்பர் ஏழாம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகம் சீர்திருத்தங்களை அறிவித்தது. அந்நாட்டு அரசின் எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்ஸி (Emirates News Agency) இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. மது தொடர்பான கட்டுப்பாடுகள், திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து இருப்பது, ஆணவக் கொலைகள், திருமண விவாகரத்து, வாரிசு உரிமை தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.
அதாவது, இனிமேல் இந்த நாட்டில் லிவிங்டுகெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே போல, மது அருந்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஆணவக் கொலை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது.
சொத்து மற்றும் வாரிசுரிமை விவகாரத்தில் ஷரியா சட்டப்படி உள்ளூர் நீதிமன்றங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துகள் பாகப்பிரிவினை செய்யலாம் என்பதும் மிகப்பெரிய மாற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு மாற்றமாக, சட்ட விவகாரங்களில் அரபு மொழி தெரியாத பிரதிகள் மற்றும் சாட்சிகளுக்கு இனிமேல் மொழிப்பெயர்ப்பாளர்களை நீதிமன்றங்கள் வழங்கும்.
நாட்டின் முதுகெலும்பான சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படவும் சமூக மாற்றத்துக்காகவும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளளன. தனிநபர் சுதந்திரத்தில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், இனிமேல் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களின் படி நீதிமன்ற படியேற வேண்டிய சூழல் உருவாகாது.
புதிய சட்டத்தின்படி, அமீரக நாட்டின் பார்கள், கிளப்புகளில் உரிமம் பெற்று மது அருந்தலாம் வீட்டுக்கும் கொண்டு செல்லலாம். வெளிநாட்டவர்கள் ஏற்கெனவே சிறப்பு உரிமம் பெற்று அமீரகத்தில் மது அருந்த சட்டத்தில் இடமுள்ளது. இதனால், இந்த சலுகை முக்கியமாக அமீரகக்காரர்களுக்காகவே இயற்றப்பட்டுள்தாக சொல்லப்படுகிறது.
இனிமேல், அமீரககார்களும் அனுமதி பெற்று மது அருந்தலாம். எனினும், கண்டிப்பாக 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது அருந்த உரிமம் கிடைக்கும். அதே வேளையில், வெளிநாட்டவர்கள் லிவிங் டுகெதராக வாழ அமீரகத்தில் தடை இருந்தது. தற்போது, அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டவர் உள்நாட்டவர் எவரென்றாலும் இனிமேல் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ முடியும்.
எனினும், இந்த தளர்வுகளால், நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று கூறி விட முடியாது. முற்போக்கானது , பாதுகாப்பானது என்றும் கருதி விட முடியாது என்று அமீரக திரைப்பட தயாரிப்பாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான அப்துல்லா அல் காபி கூறியுள்ளார். இவர், ஓரினச் சேர்க்கை, காதல், மற்றும் பாலீன சமத்துவத்துக்கு ஆதரவான சிந்தனை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தைப் பொறுத்த வரை, ஐரோப்பியர்கள்தான் மது அருந்தி விட்டு பொது இடத்தில் சச்சரவுகளில் ஈடுபடுவது, பொது இடத்தில் முத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அடிக்கடி தண்டனை பெறுவது உண்டு. சமீபத்தில், அமீரகத்தின் இங்கிலாந்தை சேர்ந்த கேட்லின் மேக்நமாரா என்ற பெண் அமீரக நாட்டின் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் 69 வயதான ஷேக் நாகியான் பின் முபாரக் அல் நாகியான் தன்னை படுக்கையில் தள்ள முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். அமைச்சரின் மீது குற்றம் சுமத்தப்பட்டு ஒரு மாதத்துக்குள் அமீரகத்தில் இத்தகைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய நாடுகளின் பொதுவான எதிரியாக கருதப்படும் இஸ்ரேல் நாட்டுடன் சமீபத்தில் அமீரகம் உடன்பாடு செய்து கொண்டது. இஸ்ரேல் நாட்டுடன் ராஜ்யரீதியிலான உறவுகளை வலுப்படுத்தவும் அமீரகம் முடிவு செய்துள்ளது.
அமீரகம் – இஸ்ரேல் நாடுகளுக்குமிடையே விமானப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லிவிங் டுகெதர் மற்றும் மதுவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது போன்றவை கடுமையாக இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் சவுதி உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளின் தலைமை நாடாக கருதப்படும் சவுதி அரேபியா, அமீரகத்தில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை. எனினும் 2019 – ஆம் ஆண்டு,சவுதி அரேபியாவிலும் வெளிநாட்டவர்கள் ஓட்டல்களில் ஒரே அறையில் தங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது