கிராபிக்ஸ் பாம்புக்கு ஆதாரம் கேட்டு நடிகர் சிம்புக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு புதிதாக நடித்து வரும் படம் ‘ஈஸ்வரன்’. இதன் முதல் தோற்ற போஸ்டரில் நடிகர் சிம்பு தனது கழுத்தில் பாம்பை போட்டு பிடித்து இருப்பது போலவும், மற்றொரு வீடியோவில், நடிகர் சிம்பு மரத்தில் இருக்கும் பாம்பை பிடித்து சாக்கு பையில் போடும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்த காட்சியில் வன விலங்கை துன்புறுத்துவதாகவும், இதனால் நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வன விலங்கு நல ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசனிடம் புகார் மனு அளித்தார்.
ஆனால் சிம்பு கழுத்தில் போட்டு இருப்பது பிளாஸ்டிக் பாம்பு. அதை வீடியோவில் நிஜ பாம்பு போல கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருப்பதாக வனத்துறையிடம் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரமாகியும் ஆவணங்கள் தரவில்லை என தெரிகிறது.
இதையடுத்து கிண்டி வனத்துறையினர் இது தொடர்பாக நடிகர் சிம்பு வீட்டுக்கு நேரில் சென்று 2-வது முறையாக நோட்டீஸ் வழங்கினார்கள். இயக்குனர் சுசீந்திரன் உள்பட படக்குழுவினருக்கும் 2-வது நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கும் உரிய காலத்தில் ஆவணங்கள் தராவிட்டால் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.