அரசியலமைப்பிற்கு முரணாகவே அரசாங்கம் அரச நிதியை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு பாராளுமன்ற அனுமதி பெறப்படவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தவிர தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இராணுவ தளபதியால் வழங்கப்பட்டு வரும் உத்தரவுகளுக்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த காலத்தில் ஜனாதிபதி மேற்கொண்ட செலவுகளுக்கு யார் அனுமதி வழங்கினார்கள்.நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது.இது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தி அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் சட்ட விரோதமாகவே கடந்த காலத்தில் நிதி செலவிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்தார். இவ்வாறு உத்தரவிட்டதற்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகளே தற்போது சாதாரணமாக இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நிதி தொடர்பில் பாராளுமன்றத்திற்கே அனுமதியுள்ளது.இந்த நிலையிலே நாம் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி நீதிமன்றம் சென்றோம்.
ஆனால் நீதிமன்றம் காரணமின்றி வழக்கை நிராகரித்தது. கொவிட் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார சங்கம் முன்கூட்டியே கோரியிருந்தது. அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமை தாங்குகிறார். அலுவலகம் கூட திறக்கிறார். அவர் பாராளுமன்றம் வருவது வேறுவிடயம். நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி கோரி பாராளுமன்றத்தின் அனுமதியை அரசு கோருகிறது.இதனை ஏற்கமுடியாது என்றும் அவர் கூறினார்.