சினிமா படங்களுக்கான வி.பி.எப். கட்டணம் தற்காலிகமாக ரத்தாகி இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 1,140 திரையரங்குகளும் தீபாவளி பண்டிகையான இன்று திறக்கப்படும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று பிஸ்கோத், இரண்டாம் குத்து 2, மரிஜுவானா, தட்றோம் தூக்குறோம், பச்சைக்கிளி, கோட்டா ஆகிய 6 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. பிஸ்கோத் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். கண்ணன் இயக்கி உள்ளார். நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. இரண்டாம் குத்து 2 படத்தில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ளார். பேய் படமாக தயாராகி உள்ளது. எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் நடித்துள்ள மரிஜுவானா படம் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் சமூக சீரழிவுகளை பேசுகிறது. சாய் செல்வம் இயக்கத்தில் ஜிப்ஸி ராஜ்குமார் நடித்துள்ள பச்சைக்கிளி படம் கலாசார முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. அமுதவானன் இயக்கத்தில் பவாஸ் நடித்துள்ள கோட்டா படம் திரைப்பட விழாக்களில் வெளியாகி விருதுகளை வென்றுள்ளது.
இவை தவிர ஓ.டி.டி. தளத்தில் மூக்குத்தி அம்மன், பச்சை விளக்கு ஆகிய படங்கள் வருகின்றன. மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா கன்னியாகுமரி பகவதி அம்மனாக நடித்து இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். பச்சை விளக்கு படத்தை டாக்டர் மாறன் இயக்கி நடித்துள்ளார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு படமாக தயாராகி உள்ளது. சர்வதேச அளவில் விருதுகளையும் இந்த படம் பெற்றுள்ளது. சுந்தர்.சி தயாரித்து பத்ரி இயக்கி பிரசன்னா, ஷாம் நடித்துள்ள நாங்க ரொம்ப பிஸி படம் நேரடியாக தொலைக்காட்சியில் இன்று ரிலீசாகிறது. இதேபோல விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ‘டீசர்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.