இந்திய கடல் உணவுப் பொருள்களின் இறக்குமதியை ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன அரசின் ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளதாவது:
இந்திய நிறுவனங்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்த கணவாய் மீன்களின் ஒரு சில மாதிரி பெட்டகங்களின் வெளிப்புறத்தில் கொரோனா கிருமி தொற்று (கொவைட்-19) இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருள்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு தற்காலிக தடை விதிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது என அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவைச் சோ்ந்த எந்த நிறுவனம் ஏற்றுமதி செய்த கணவாய் மீன் பெட்டகங்களில் கரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து சீனா விளக்கம் எதையும் அளிக்கவில்லை.
இதனிடையே, கிழக்கு சீனாவின் லியாங்சன் மாகாணம் ஷான்டங் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இறக்குமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை சோதனையிட்டபோது அதிலும் கொவைட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாட்டிறைச்சி மற்றொரு சீன நகரத்திலிருந்து விநியோகிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.