பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட காமெடியாக உள்ளது என்று நடிகர் சந்தானம் கூறினார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் நேற்று இத்திரைப்படம் வெளியானது. இதையடுத்து சென்னை கமலா திரையரங்கில் பார்வையாளர்களுடன் நடிகர் சந்தானம் உள்ளிட்ட ‘பிஸ்கோத்’ படக்குழுவினர் படம் பார்த்து ரசித்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சந்தானம் கூறியதாவது:-
‘படம் பார்க்க மக்கள் திரையரங்குக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனாவுக்குப் பின் வெளியான எனது முதல் படமான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை மக்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று நன்றி சொல்ல முடியாத காரணத்தால், சென்னை கமலா திரையரங்கில் கேக் வெட்டி ஆடியன்ஸ்க்கு நன்றி தெரிவித்தேன். இது என்னுடைய படம் மட்டும் அல்ல. இதற்குப் பின்னர் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் தான் வாழ வைக்கும் தெய்வங்கள். அவர்களுக்கு நன்றி சொல்லத்தான் முக்கியமாக நான் இங்கு வந்தேன்.
ஓடிடி என்பது பூஜை அறை போன்றது. தியேட்டர் என்பது கோவில் போன்றது. இரண்டிலும் தெய்வம் உள்ளது. ஆனால் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் என்பது வேறு என்றார்.
அப்போது சந்தானத்திடம் நீங்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல் உலவுகிறதே உண்மையா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘தான் பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை அப்படியான எண்ணம் எனக்கில்லை.’ என்றார்.
பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட காமெடியாக உள்ளது என்று கூறினார். தற்போது 50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு அதை அதிகரிக்க வேண்டும் என்றும் 50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ள போதிலும் திரையரங்க வாடகை குறைக்கப்படவில்லை என்றார்.