பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை இன்று தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரத்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
—–
நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை மேற்கொள்வதற்கு நாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதே போல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறதேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும்.
எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமைபோன்று நடத்துவோம், நம்மை கைது செய்தால் கைது செய்யட்டும் ஆனால் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் என்றார்.