முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30 ம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20 ஆம் திகதி , மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.
இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி , தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினரால் நேற்று முன்தினம்(23) நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் அன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், புரந்திரன் எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா, திருமதி துஷ்யந்தி சிவகுமார், ஹாரிஸ், உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை இன்றைய திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வருகைதந்த சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ர சட்டத்தரணிகள் மூவர் முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் குறித்த ஆறு வழக்குகளையும் நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்யப்பட்டு நேற்று (24) திறந்த நீதிமன்றிலே குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது, தடையுத்தரவு நீடிக்கப்பட வேண்டும் என்ற தமது தரப்பு நியாயங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்குகளின் கட்டளையை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி இன்று (25) வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-