ஏ.ஆர்.முருகதாஸின் புதிய முயற்சி

தமிழ்த் திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய முயற்சி ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இப்போது வரை ‘தளபதி 65’ இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் என்ன என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிம்புவை இயக்கவுள்ளார், தெலுங்குப் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் எந்தவொரு நாயகனையும் வைத்து அடுத்த படத்தை உருவாக்கவில்லை.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு படங்களைத் தயாரித்து வந்தார். அவர் நேரடியாக ஒரு படம் இயக்குவதற்கு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்தது. அந்தப் படத்தைத்தான் இப்போது இயக்க ஆயத்தமாகி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தப் படம் லைக் ஆக்‌ஷன் பாணியில் உருவாக்கப்படும் அனிமேஷன் படமாகும். இது தமிழில் புதிய முயற்சி. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி லயன் கிங்’ பாணியில் இந்தப் படம் இருக்கும். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளைத்தான் தற்போது கவனித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தத் தகவல் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விசாரித்தபோது, “அடுத்த படம் தொடர்பாகப் பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. ஆனால், அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இந்தப் படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related posts