கொரோனா ஊரடங்கால் 7 மாதங்கள் முடங்கி இருந்த திரையுலகம் தளர்வு காரணமாக இப்போது மீண்டு வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய படங்கள் ரிலீசாகி கொண்டு இருக்கின்றன. சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வருவதால் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் இல்லை. எனவே பெரிய படங்கள் வருகையை ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் ஜெயம் ரவியின் பூமி, விஷாலின் சக்ரா, கார்த்தியின் சுல்தான், தனுசின் ஜெகமே தந்திரம், விஜய்சேதுபதியின் மாமனிதன், லாபம், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட சில பெரிய படங்கள், அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்த படங்களை அடுத்தடுத்து திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. கார்த்தியின் சுல்தான் படமும் பொங்கல் போட்டியில் உள்ளது. ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியான சில பெரிய படங்கள் 4 மாதத்துக்கு பிறகு ஒப்பந்தத்தின் படி தியேட்டர்களில் ரிலீசாகலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஊரடங்கை தளர்த்தியும் 40 படங்களில் 17 புதிய படங்களின் படப்பிடிப்புகள் மட்டுமே தற்போது நடக்கின்றன. நடிகர்களுக்கு சம்பள அட்வான்ஸ் கொடுத்த பிறகு கொரோனாவின் 2-வது அலை தொடங்கினால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் மற்ற படங்களின் படப்பிடிப்புகளை பொங்கலுக்கு பிறகு ஆரம்பிக்கலாம் என்று நிறுத்தி வைத்துள்ளனர்.