கங்கணாவின் பங்களா இடிப்பு வழக்கில் மும்பை மாநகராட்சியை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கங்கணாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் திரையுலகத்தினரை நடிகை கங்கணா வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மேலும், மும்பை நகரம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்றும் விமர்சித்தார். இதனால் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசுக்கும், கங்கணாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கணாவின் பங்களா சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறி அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதை எதிர்த்து ரூ.2 கோடி இழப்பீடு அளிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கணா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் கங்கணா மீண்டும் கட்டிடம் கட்டிக் கொள்ளலாம் என்றும், மேற்கொண்டு விரிவுபடுத்தவும், கட்டப்பட்ட இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவும் மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
“மும்பை மாநகராட்சியின் உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. தீயநோக்கோடு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது சரியாக இருக்கும்.
மாநிலத்துக்கு எதிராகவும், திரைத்துறைக்கு எதிராகவும் மனுதாரார் (கங்கணா) கூறிய குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்கவில்லை. அனுமதியின்றிக் கட்டுமானம் எழுப்புவதையும் இந்த நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. ஆனால், மனுதாரர் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாட்டோடு பேச வேண்டும். குடிமக்கள் கூறும் பொறுப்பற்ற விஷயங்களை மாநில அரசு புறக்கணிப்பதே சிறந்ததாகும்.
அவரது கருத்துகள் என்னவாக இருந்திருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சியின் நடவடிக்கை சட்டத்துக்கு எதிரானது, ஆபத்தானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. குடிமக்களின் உரிமையை மதிக்காமல் மும்பை மாநகராட்சி செயல்பட்டுள்ளது” என்று உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை வரவேற்றுள்ள கங்கணா, “ஒரு தனி நபர் அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் அது அந்த தனி நபருக்குக் கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. இடிந்துபோன என் கனவுகளைக் கண்டு சிரித்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் நீங்கள் வில்லனாக இருப்பதால்தான் நான் நாயகியாக இருக்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.