தேவனுடைய காலமும் கிறிஸ்துவின் பிறப்பும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
காலம் நிறைவேறினபோது, ஸ்திhPயினிடத்திற் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். கலாத்தியர் 4:5.
நாம் வாழும் இன்றைய உலகில் அநேக மதங்கள் காலத்தை ஒரு காலச்சக்கரமாக, அதாவது ஒரு தொடர்சங்கிலியாகக் கருதுகிறது. ஆனால் கிறிஸ்தவர்களைப் பொறுத் தளவில் காலம் ஒரு சக்கரம் அல்ல. அது ஒரு நேர்கோடு. அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவுமுண்டு. அது நித்தியத்தில் ஆரம்பித்து நித்தியத்தில் முடிகிறது.
நம்முடைய ஆண்டவராகிய தேவனும்கூட மனிதருக்காக தம்மைத் தாமே தாழ்த்தி, காலத்திற்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவராhய் சகலத்தையும் அதினதின் காலத்தில் செய்கிறார். அவருடைய ஜனமாகிய நாமும் தேவன் நமக்கு முன்பாக வைத்திருக்கும் காலத்தை நேர்த்தியாக கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.
கர்த்தராகிய தேவன், தாம் நேசித்தமக்களை பாவத்தின் அடிமைத் தனத்தில் இருந்து மீட்க ஒரு காலதிட்டத்தை வகுத்தார். இதனை முதலில் ஆதியாகமம் 50வது அதிகாரத்தில் காணலாம். 400 வருட எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து தேவன் மீட்பார் என்று யோசேப் அதை நினைவுபடுத்தி தனது எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். அதேபோல தேவன் எகிப்திலிருந்து அவர்களை மீட்டு பானும் தேனும் ஓடும் கானானிற்கு அழைத்து வந்தார்.
அவர்கள் தேவனைத்தேடி அவரின் கட்டளைகளை கடைப்பிடிப்பதும், பின்னர் அவைகளில் இருந்து விடுபடுவதுமாக இருந்து வந்தனர். ஆனால் அவர்களை நேசித்த தேவன் காலத்திற்குக்காலம் அவர்களை தமது தீர்க்கதரிசிகள் மூலம் விடுவித்து வந்தார். முற்று முழுவதாக மனித குலத்தை பாவத்தில் இருந்து விடுவிக்க அவரால் முடியவில்லை. இருந்தும் தாம்நேசித்த மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்க ஒரு காலதிட்டத்தை வகுத்தார்.
அந்த காலம் நிறைவேறின போது இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்து பிறந்தார். இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, (அதாவது, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக, யோவன் 1:12) காலம் நிறைவேறின போது, ஸ்திhPயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (இதனை நன்கு அறிந்து கொள்ள ஆதி.3 ஐ வாசிக்கவும்).
இதேபோல தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பதற்கு ஒரு காலம், இறப்பதற்பு ஒரு காலம் என ஒரு காலக்கணிப்பை வைத்திருக்கிறார். அதற்கு இடைப்பட்ட காலமே நமது வாழ்க்கையாகும். அதுதான் நமது சிந்தனையை தெளிவுபடுத்தும் பருவகாலமாகும். அந்த பருவகாலத்தை நாம் நல்வழியில் பயன்படுத்தும்போது நமது வாழ்க்கை ஒளிமயமான தாகும்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். யோவான் 1:1-2,14. இங்கு நாம் பார்க்கிறோம் ஆதியிலே வார்த்தை இருந்தது என ஆரம்பிப்பதை.
ஆதி என்பது என்ன? படைப்புக்கள் அனைத்திற்கும் முந்திய காலம். ஆரம்பமும் முடிவுமற்ற நித்திய காலம். நித்திய நித்தியமாக இருக்கும் காலங்களைக்கடந்த கடவுளின் காலம். அதை காலம் என்று சொல்வதைவிட நித்தியம் என்று அழைப்பதே பொருத்தமானது. அந்த நித்தியத்திலே வார்த்தையாக தேவனோடு தேவனாக இருந்தவர். சகலத்தையும் சிருஸ்ட்டித்தவர், மனிதனை பாவத்தில் இருந்து மீட்க இயேசு கிறிஸ்துவாக மனித அவதாரம் எடுத்து வந்தார்.
பிறப்பும் இறப்பும் அற்றவராய் காலங்களை கடந்த நித்தியமான அவர், நமக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் இன்று நம்மோடு நமக்குள் வாசம்பண்ணு கிறார். இந்த சத்தியமானது நம்மை உற்சாகப்படுத்தட்டும்.
இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நம்மை சந்தோசப்படுத்த பல ஆயத் தங்கள், பல கொண்டாட்டங்கள் நடைபெறலாம். அதில் தவறில்லை. ஆனால் அந்த சந்தோசத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிப்படை, வார்த்தையானவர் மனிதனாக வந்து பிறந்து, பாவத்தில் அமிழ்ந்து போயிருக்கும் மனுக்குலத்தை மீட்டு, அவர்களுக்குள் வாசம் பண்ணுகிறார் என்ற சத்தியம் இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் வெளிப்படட்டும்.
இந்த உண்மையை நீயும் அறிந்து, இவர் உன்னில் வாசம்பண்ண உன்னை அவரிடம் ஒப்புக்கொடு. இது உனது வாழ்க்கையை நல்வழிப் படுத்தும் பருவகாலமாக அமையட்டும்.
அன்பின் இயேசு சுவாமி, இன்று இந்தனையூடாக தமது வாழ்க்கையில் மாற்றத்தைக்காண வேண்டும் என்று யார் யார் தீர்மானம் எடுத்தார்களோ அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் இருளான பகுதிகள் அகன்று, ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை கண்டு கொள்ள உதவி செய்யும்படியாக வேண்டுகிறேன். உம்முடைய பிறப்பின் மகிழ்ச்சி, நித்திய வாழ்வைக் கண்டுகொள்ளும் காலமாக அமையட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro.Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.