தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன், ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முழுமையாக முடிப்பார்.சிறுத்தை சிவா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 60 சதவீதம் முடிந்து உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று நேற்று பெங்களூரு புறப்பட்டு சென்றார். அங்கு தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து வணங்கி புதிதாக கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றார்.
ரஜினி வருகையை அறிந்த ரசிகர்கள் பெங்களூரு வீட்டின் முன்னால் திரண்டு வாழ்த்து கோஷமிட்டனர். அவர்களை பார்த்து வீட்டின் மாடியில் நின்றபடி ரஜினி கையசைத்தார். வருகிற 12-ந்தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் பெங்களூருலேயே தங்கி இருப்பார் என்று தெரிகிறது.
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை வருகிற 15-ந்தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொண்டு நடிக்கிறார். ஜனவரியில் இருந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்த மாத இறுதிக்குள் அண்ணாத்த படத்தில் தனது சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடிக்கும்படி இயக்குனர் சிவாவை ரஜினி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த ரஜியின் கடைசி படமாக இருக்கும் என்றும் அரசியலுக்கு வருவதால் இனிமேல் புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.