கண்டி நகரில் இருந்து நுவரெலியா வரையில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பது பற்றிய சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்திலேயே அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.
பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளை போன்று பிரதேச சிறிய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்..
—-
யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர்.
அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
—–
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 526 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 53 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த ஒருவரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,818 ஆக அதிகரித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலங்களில் 454 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,258 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 7,978 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.