ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் ஒருவரான இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.
பிரபல வார இதழுக்குப் பேட்டி அளித்துள்ள ஏஞ்சலினா ஜோலி, குடும்ப வன்முறை குறித்தும், அதிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
குடும்ப வன்முறையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். யாரிடமாவது பேசுங்கள். நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முயலுங்கள். அவசர உதவிகளுக்கு தொடர்பில் இருங்கள். உதாரணமாக, உங்கள் நண்பரிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ உங்கள் இருவருக்கும் மட்டுமே புரியக் கூடிய வகையிலான சமிஞ்கை மொழிகளைக் கற்றுக் கொடுங்கள். உங்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அறிவை வளர்க்கத் தொடங்குகள். சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களில் அனைவருமே உங்களை ஆதரிப்பவர்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம்.
பெரும்பாலும் உங்களுக்கு உதவுபவர்கள் அந்நியர்களாகவே இருக்கக் கூடும். அல்லது குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட வேறு நபர்களாகவோ, ஆதரவுக் குழுக்களாகவோ இருக்கக் கூடும்.
எல்லாவற்றுக்கும் மேல் கவனமாக இருப்பது முக்கியம். வெளியிலிருந்து ஆதரவு கிடைக்கும் வரை நீங்கள் எத்தகைய ஆபத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.
அதே போல பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடம் உதவி கோரும்போது, மற்றவர்கள் அவர்களோடு உறுதுணையாக நில்லுங்கள். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களை மதிப்பீடு செய்யாதீர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் உணர்வுரீதியான, பொருளாதார, ரீதியான, சட்ட ரீதியான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
இவ்வாறு ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார்.
45 வயதாகும் ஏஞ்சலினா ஜோலி ஐ.நா. சபையின் சிறப்பு தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.