சித்ராவின் தற்கொலை முடிவு தொடர்பாக மனோபாலா கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அதில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சித்ராவுடன் நடித்தவர்கள் பலரும் கதறி அழுதார்கள்.
சித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் மனோபாலா பேசியதாவது:
“சகோதரி சித்ராவின் இழப்பு சின்னத்திரைக்கு மிகப்பெரிய இழப்பு. ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும் எனத் தெரியவில்லை. சித்ரா மாதிரி ரொம்ப தைரியமான பெண்ணைப் பார்க்கவே முடியாது. வாழ்க்கையில் எதுவென்றாலும் எதிர்கொள்ளச் சக்தி எங்களுக்கு வேண்டும். அந்த அளவுக்கு அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் இந்த திடீர் முடிவு எடுத்தது எதற்காக? ஒவ்வொருவரையாக இழப்பது மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. சின்னத்திரையில் நிறைய இழப்புகள் நடக்கின்றன.
சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். வேலைப்பளுவை ரொம்பவே ஏற்றிக் கொள்ளாதீர்கள். வேலைப்பளுதான் உங்களுக்கு மனச்சுமையையும், வேதனையையும் கொடுக்கிறது. தயவுசெய்து யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி எத்தனை நண்பர்கள் இருக்கிறோம். 1500க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறோம். அனைவருமே உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
நிர்வாகிகள் எங்களுக்குத் தொலைபேசியில் சொல்லியிருந்தால் கண்டிப்பாக உதவி இருப்போம். அவசரப்பட்டு இந்த மாதிரி முடிவை எல்லாம் எடுக்காதீர்கள். ரொம்ப வேதனையாக இருக்கிறது. அனைவரையும் கை எடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன். ப்ளீஸ்.. தயவுசெய்து நிறுத்துங்கள்”.
இவ்வாறு மனோபாலா தெரிவித்துள்ளார்.