மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதா என்பது தொடர்பிலும் தேர்தலை நடத்துவதற்கு உரிய ஒழுங்கு விதிகளை மேற்கொள்வது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு வுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கான தலையீடுகளை பொது ஜன பெரமுன கட்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே மேற்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அதற்கமைய நேற்றைய தினம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மாகாண சபை உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகள் இன்றி மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ள பசில் ராஜபக்ச கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கத்துடனேயே மாகாண சபைகளுக்கான சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்து பழைய முறையிலோ அல்லது தற்போதைய முறையிலோ தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்