டிசம்பர் 15-ம் தேதி அன்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டுப் படக்குழுவினருக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளதையும் உறுதி செய்துள்ளார் ரஜினி. அதற்கு முன்பாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுக்கவுள்ளார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
சிவா இயக்கத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இயக்குநர் சிவா பேசியிருப்பதாவது:
” ‘அண்ணாத்த’ படக்குழுவினர் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் வளர்ந்து, நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரசிகர்களுடைய வாழ்த்துகளுடன், இறைவனின் நல்லாசியோடு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை டிசம்பர் 15-ம் தேதி தொடங்குகிறோம். நல்ல குழுவுடன், சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் மிகப்பெரிய படமாக ‘அண்ணாத்த’ படம் வந்து கொண்டிருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது”
இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
கடும் கட்டுப்பாடுகள்:
‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவருக்குமே கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும், அனைவருமே கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டுவரப்படுவர்.
அதிலிருந்து யாருமே வெளியே சென்றுவிட்டு, உள்ளே வர இயலாது. அனைத்துத் தேவைகளும் ஒரே இடத்தில் கிடைப்பது போன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை என்றால், ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க ‘அண்ணாத்த’ படக்குழு முடிவு செய்துள்ளது.