மிக நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று ஒரு தீர்வினை காண முன்வருமாயின் அவர்களுடன் இணைந்து செயற்பட நான் தயாராக உள்ளேன் என்று கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.
அதேபோன்று அவர்கள் நான் அமைச்சரவையில் இருப்பதை விரும்பவில்லை எனில் நான் அமைச்சுப் பதவியிலிருந்து ஒதுங்கி அவர்கள் அரசுடன் இணைந்து தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூடவே ஆதரவாக இருப்பேன். அதற்கான அழைப்பையே நான் பாராளுமன்றத்திலும் விடுத்திருந்தேன் என்றும் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட தேவைகளும் கிடையாது. எதற்காகவும் நான் எவரிடமும் கையேந்தியதுவுமில்லை. எனக்கு தேவை தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என தெரிவித்த அவர், தென்னிலங்கையை உசுப்பேற்றும் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதுவரை காலமும் உசுப்பேத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களின் போலியான ஆதரவை பெறுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாக இருந்து வருகின்றது. அதனை அவர்கள் இனி கைவிட வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
தமிழ் மக்கள் எனக்கும், எனது கட்சிக்கும் தேவையான ஆதரவினை வழங்கி இருந்தால் அல்லது எதிர்காலத்தில் வழங்குவார்கள் எனில் என்னால் அரசாங்கத்துடன் முழுமையாக பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிமையுடனும், அதிகாரத்துடனும் தீர்வினைக் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் இந்த உண்மை நிலையை உணரும் காலம் வரும்வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தலைமைகளுக்கு அவர்களது சுயலாப அரசியல் நடத்துவதற்கு வாய்ப்பாகவே இருந்துவரும். எனவே தமிழ் மக்கள் இந்த உண்மை நிலையை உணர்ந்து ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், வெளியேயும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் அரசாங்க அமைச்சர்களுக்கு, ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவரும் அதேவேளை பின் கதவால் சென்று தமது சுய தேவைகளை நிறைவேற்றி சுயலாப அரசியல் நடத்திக் கொண்டுதான் வருகிறார்கள்.
இது அப்பட்டமான உண்மை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா இந்த போலி வேஷத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் களைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்