யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதனால் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
யாழ்.மருதனார்மட சந்தை பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 32 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் ஊடாக யாழின் ஏனைய பகுதிகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுவதனால் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கல்வி நடவடிக்கைகளை பொறுத்த வரைக்கும் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை தற்போது மூடியுள்ளோம். அது தொடர்பில் சுகாதார பிரிவினரும், கல்வி பிரிவினரும் கலந்துரையாடி ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பரிசீலனை செய்வார்கள்.
யாழ்.மக்கள் மிக அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடக்குமாறு கோருகின்றோம். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், சுகாதார பிரிவினருக்கு அறிவியுங்கள்.
தனிமைப்படுத்த பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இதுவரை சுற்று நிரூபங்கள் எவையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
அது கிடைத்ததும் அந்த அந்த பகுதிக்கான பிரதேச செயலர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றார்.
கேள்வி : யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த தினங்களில் குழப்பம் நிலவியதே?
பதில் : கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க கூடியவர்கள் சுகாதார திணைக்களமே. அவர்களது முடிவே உத்தியோக பூர்வமானது. அவர்களால் அனுப்பப்படும் முடிவுகளின் அடிப்படையிலையே கொவிட் – 19 செயலணி முடிவுகளை எடுப்பார்கள். அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை அறிவிப்பார்கள்.
ஏனையவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் உத்தியோகபூர்வமற்றவை. யாழில் கடந்த சில தினங்கள் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தரவுகளில் குழப்பம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரிக்கப்படும் என்றார்.
யாழ்ப்பாணம் குறூப், யாழ்.விசேட நிருபர்கள்