பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு என அமைச்சர் தெரிவித்தார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்ல இருக்கிறார்கள். பிரச்சினைகளை தீர்ப்பது அதிகாரிகளின் வேலை. அரசியல்வாதிகளின் பொறுப்பு என்னவென்றால் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குதலாகும். பாரம்பரிய அரசியல் நடைமுறைகளின் படி இது கடினமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
——
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூநகரி பகுதியில் உள்ள எல்ஆர்சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த உத்தரவை அமைச்சர் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த காணிகள் வெகுவிரைவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
—–
இம்மாதம் 26 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக இந்நாட்டு விமான நிலையங்களை திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணவக்க தெரிவித்தார்.
அதன்படி, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய சுற்றுலாத் துறையை மீண்டும ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காலி, பத்தேகம பிரதேசத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.