இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் நிறுத்துவது தொடர்பாக எதிர்வரும் 30 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்துடன் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இச் சந்திப்புக்கு முன்னதாக வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள் உடனான விசேட சந்திப்பு நேற்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்திய இழுவை மடி தொழிலாளர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன. கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நீண்ட காலமாக வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள். எனினும் கடந்த காலங்களில் அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினால் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து மீனவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் அத்துமீறி எமது கடல் பிரதேசத்திற்குள் நுழையும் மீனவர்களின் வருகைக்கு ஒரு தகுந்த முடிவு கிடைக்கும் என்றார்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்