விமான நிலையங்கள் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் முதலாவது உல்லாச பிரயாணிகள் எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டுக்கு வருகை தர உள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தடவையாக 200 உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்தார்.
ரஷ்ய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களூடாக நாட்டுக்கு வர உள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பிரயாணிகள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் உல்லாசப் பிரயாணத் துறை பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தரும் போது அங்கு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அத்துடன் அவர்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் வாகன போக்குவரத்து வசதிகளும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேவேளை எதிர்வரும் 26ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளிலும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வெளிநாட்டமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.