சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர்.
அரசியலில் ஈடுபட இருப்பதால் அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரை ரஜினிகாந்த் அறிவுறுத்தினார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட வேகமாக காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையில் வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பார் என்று தெரிகிறது. அதன்பிறகு மீண்டும் ஐதராபாத் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அடுத்த மாதம் 12-ந் தேதிக்குள் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். பொங்கலுக்கு பிறகு முழுநேர அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறார்.