அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ரமேஷ்வரன் மற்றும் நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கலந்து கொண்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தலவாக்கல லிந்துலை நகர சபை தலைவர், செயலாளர் அந்த நகர சபை ஊழியர்கள் 10 பேர் மற்றும் பிரதேசத்தின் ஊடகவியலாளர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி எம்.கனேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கண்டி பொல்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நுவரெலியா, கொட்டகலை, அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலிய ஆகிய பிரதேச சபை தலைவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
——-
நத்தார் தினமான நாளையயதினம் (25) நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு, கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆயினும் சுற்றுலா அபிவிருத்தி அதிசாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விசேட மூன்று ஆண்டு அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு, கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் முழுநோன்மதி தினமான இம்மாதம் 29 ஆம் திகதியும், நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
—–
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொண்ணம்பலம் தெரிவித்தார்.
இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் கைதிகளில் இத்தகைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்திற்கும் முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நீண்டகாலமாக சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
அவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதிகளுக்கு உரிய உணவு வசதிகளோ மருத்துவ வசதிகளோ எவையும் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே அவர்களுக்காண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறு ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தையும் கோரியுள்ளோம் என்றார்.