சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்.டி.ஓ நடத்திய விசாரணை அறிக்கை இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ந்தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் அவரது கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், ஹேம்நாத்தின் பெற்றோர் என பல தரப்பிலும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை அதிரடியாக கைது செய்த போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வந்தது. ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, சித்ராவின் குடும்பம், அவரின் தோழிகள், ஓட்டல் ஊழியர் உள்ளிட்டோரிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை அறிக்கையானது ஓரிரு நாட்களில் காவல்துறை வசம் தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.