‘பூமி’ படத்தின் கதைக்களம் என்ன என்பதை ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூமி’. திரையரங்க வெளியீட்டுக்குத் திட்டமிட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பூமி’ ட்ரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு, ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ‘பூமி’ படத்தின் கதைக்களம் என்ன என்பதை முழுமையாகக் கூறியுள்ளது.
‘பூமி’ கதைக்களம் குறித்து ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கூறியிருப்பதாவது:
“நாசா விஞ்ஞானி பூமிநாதன் (ஜெயம் ரவி) செவ்வாய் கிரகத்தில் விவசாயம் பண்ணும் இலக்கிற்காகப் பணிபுரிந்து வருகிறார். அந்தப் பணி முழுமையடைவதற்கு முன்பு, சிறிய இடைவெளியில் சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது விண்வெளியில் விவசாயம் செய்வதற்கு முன், விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதை உணர்கிறார்.
விரைவில் விவசாயத்தை அதிக லாபம் கொண்ட தொழிலாகக் காட்டக்கூடிய ஒரு முன்வடிவை உருவாக்குகிறார். ஆனால், அவர் ஆபத்தான வைரஸைப் பரப்புகிறார் என்ற வதந்தியால் உள்ளூர் அமைச்சரால் அவரது விவசாய நிலம் அழிக்கப்படுகிறது. அவருக்கு முன் உள்ள தடைகளை பூமிநாதன் எப்படித் தாண்டுகிறார்?. இதுவே கதைக்களம்.”
இவ்வாறு ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தெரிவித்துள்ளது.